உய்யுமோ... உயர்கல்வி?
ஒரு நாட்டின் வளர்ச்சியின்மைக்குப் பல காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றின் கூட்டுவிளைவால் வளர்ச்சிப் பாதையிலிருந்து பின்னோக்கி இழுக்கப்படுகிறது நமது நாடு. குறிப்பாக, கல்வியின்மையின் அளவு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது (35 சதவீதம்) கவலைக்குரியது. இதுவே வளர்ந்த நாடுகளில் 5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.
அரசியலமைப்புச் சட்டத்தின்படி 6 - 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்க வேண்டியதன் பெரும்பகுதி வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. அதிலும் 3 - 6 வயதுடைய குழந்தைகள் சுமார் 7 கோடிக்கு மேல் இருப்பினும், அவர்களுக்கு கல்வியறிவை அளிக்காமல் இருப்பது நமது நாட்டுக்குப் பெருத்த இழப்பைத்தான் ஏற்படுத்தும்.
வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் உழைப்பதற்குத் தயார் நிலையிலுள்ள உழைப்பாளிகளை போதிய பயிற்சியின்மை மற்றும் கல்வித் தகுதியின்மை என்ற நிலைகளில் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இது நமது நாட்டைப் பொறுத்தவரை கண்கூடு. மனித வளர்ச்சிக் குறியீட்டில் உலகின் 174 நாடுகளின் தர வரிசையில் 124-வது இடத்தைப் பிடித்துள்ள (2004-ஆம் ஆண்டு கணிப்பு) நாம், மேலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்படும் அவலம் உள்ளது. எனவே 14-23 வயதிற்குட்பட்ட பெரும்பாலானோர்க்கு உரிய தொழிற்பயிற்சி அல்லது உயர்கல்வி தரப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்.
ன ஐஐடி, ஐஐஎம்., போன்ற சுமார் 20 நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களை அதிகரிப்பதற்கு மட்டுமே அடுத்த மூன்றாண்டுகளில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் கல்வி' திட்டத்தை மேலெடுத்துச் செல்லத் தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவும் அவசியமும் இதிலிருந்து ஓரளவிற்குப் புலனாகும்!சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் கடும் போட்டியால் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க, நம் நாட்டில் உயர்கல்வியைத் திட்டமிட்டு உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது! 112 கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 105 லட்சம் மாணவர்களே உயர்கல்வியை எட்டுவதும், 1.4 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வதும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய மக்கள்தொகைப் பெருக்க நெருக்கடியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
உயர்கல்வி முற்றிலுமாகத் தனியாருக்கே தாரை வார்க்கப்படுகிற நிலை; 8 சதவீதமாக உள்ள உயர்கல்விக்கான மாணவர் விகிதம் கட்டாயமாக உயர்ந்தே ஆக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் கடைபரப்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அணிவகுப்பு; உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் முறைகேடுகள்; பல்கலைக்கழக ஆட்சிமுறை நிர்வாக கோணல்கள்; அரசுகளின் பாரா முகம் போன்ற பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்திருக்கும் நமது உயர்கல்வி, வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு ஆருடம் தேவையில்லை!
1.நால்வரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கும் கீழே உழன்று கொண்டு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இல்லாத நிலையில், அனைவருக்கும் கல்வியை அளிக்கப் போகிறோமா?
2.உரிய வயதில் உள்ள ஐவரில் ஒருவருக்காவது உயர்கல்வியைச் சுவைக்கும் வாய்ப்பை அளிக்கப் போகிறோமா?
3.கல்விக்கான செலவினம் நாட்டின் வருங்காலத்திற்கான முதலீடு என்ற உணர்வுடன் 2020-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதார வல்லரசாக உயரப் போகிறோமா?
இத்தகைய எண்ணற்ற வினாக்களுக்கு விரைவில் விடை காணத்தானே வேண்டும் நாம்!
நன்றி-தினமணி




































