Sunday, March 04, 2007

உய்யுமோ... உயர்கல்வி?

ஒரு நாட்டின் வளர்ச்சியின்மைக்குப் பல காரணிகள் சுட்டிக் காட்டப்படுகின்றன. அவற்றில் ஒரு சிலவற்றின் கூட்டுவிளைவால் வளர்ச்சிப் பாதையிலிருந்து பின்னோக்கி இழுக்கப்படுகிறது நமது நாடு. குறிப்பாக, கல்வியின்மையின் அளவு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பது (35 சதவீதம்) கவலைக்குரியது. இதுவே வளர்ந்த நாடுகளில் 5 சதவீதம் என்ற அளவிலேயே உள்ளது.


நமது நாட்டின் மக்கள்தொகை ஏறத்தாழ 60 சதவீதம் அளவுக்கு இளைஞர்களைக் கொண்டிருக்கிறது என்பதால் உலகிலேயே மிக இளமையான நாடு என்று நாம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். ஆனால் அவர்களுக்குரிய கல்வியையும், வேலை வாய்ப்பையும் தர முடியாததால் அதுவே பெரும் சுமையாக உருவாகி இருக்கிறது... இருக்கப் போகிறது!
அரசியலமைப்புச் சட்டத்தின்படி 6 - 14 வயதிற்குட்பட்டவர்களுக்கு கட்டாயக் கல்வி அளிக்க வேண்டியதன் பெரும்பகுதி வெறும் ஏட்டளவிலேயே உள்ளது. அதிலும் 3 - 6 வயதுடைய குழந்தைகள் சுமார் 7 கோடிக்கு மேல் இருப்பினும், அவர்களுக்கு கல்வியறிவை அளிக்காமல் இருப்பது நமது நாட்டுக்குப் பெருத்த இழப்பைத்தான் ஏற்படுத்தும்.


தொடக்கக் கல்வியில் அரசுகள் எடுத்துக்கொண்ட அக்கறை மிகமிகத் தாமதமானது என்பது ஒருபுறமிருக்க, எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை என்பதே உண்மை! (முடிந்தவரை சுமையை மாநில அரசுகளின் மீது இறக்கி வைக்கவே மத்திய அரசு முயல்கிறது). இன்னமும் 40 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் கட்டடங்கள் இன்மையாலும், 20 சதவீதம் பள்ளிகள் ஒரே ஒரு அறை கொண்டதாகவும், 39 சதவீதம் பள்ளிகள் கரும்பலகை கூட இல்லாததாகவும், 35 சதவீதம் தொடக்கப் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவும் உள்ளதாக ஓர் ஆய்வு கூறுகிறது.


முதல் ஐந்தாண்டுத் திட்டத்தில் கல்விக்கான மொத்த பட்ஜெட்டின் பங்கீட்டில் தொடக்கக் கல்விக்கான பங்கு 58 சதவீதமாக இருந்தது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டகாலம் வரை இந்த ஒதுக்கீடு மெல்ல மெல்ல குறைந்து, பின்பு மீண்டும் ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 66 சதவீதமாக வளர்ச்சி பெற்றது. உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் 9.5 சதவீதமாக இருந்தது.

இதே காலகட்டத்தில் 5-ம் வகுப்பிற்குப் பிறகு 35 சதவீதம், 8-ம் வகுப்பிற்குப் பிறகு 53 சதவீதம், 10-ம் வகுப்பிற்குப் பிறகு 63 சதவீதம் என பள்ளியை விட்டு மாணவர்கள் இடையிலேயே வெளியேறும் விகிதம் உயர்ந்தது.
பெண் குழந்தைகளின் இவ்விகிதம் இன்னும் சற்று அதிகமாகும். இவ்விகிதங்களைக் கட்டுப்படுத்த இன்றைக்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மூலபலம் போதிய அளவில் ஒதுக்கப்படும் நிதி அளவாக மட்டுமே இருக்க முடியும்! ஆனால் இன்றளவும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 சதவீதத்துக்கும் குறைவாகவே கல்விக்கான ஒதுக்கீடு இருந்து வருகிறது. கல்விக்கான பிரத்யேகமான வரிவிதிப்பின் மூலம் ஆண்டுக்கு ரூ 5 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் இருந்தாலும் அது முழுமையாகச் செலவழிக்கப்படவில்லை என்பது வேதனைக்குரியது.

உயர்கல்விக்கு போதியஅளவு நிதி ஒதுக்கப்பட்டால்தான், "அனைவருக்கும் கல்வி'', "உரிய அளவில் உயர்கல்வி'' என்ற முழக்கங்கள் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இன்றைய நிலையில், உயர்கல்வி மாணவன் ஒருவனுக்காக சராசரியாக ரூ. 18,270/-மட்டுமே நமது நாட்டில் செலவிடப்படுகிறது. இது மிகமிகக் குறைந்த செலவினமாகும். இந்தோனேஷியாவில் ரூ. 30 ஆயிரம் மலேசியாவில் ரூ. 53 ஆயிரம் பிலிப்பின்சில் ரூ. 28 ஆயிரம், சீனாவில் ரூ. 1.22 லட்சம், பிரேசிலில் ரூ. 1.79 லட்சம், ஜப்பானில் ரூ. 2.17 லட்சம், பிரிட்டனில் ரூ. 3.82 லட்சம், அமெரிக்காவில் ரூ. 4.33 லட்சம் என்ற அளவில் உயர் கல்விக்கு செலவிடும் நிலை ஒப்பு நோக்கத்தக்கது.

வளர்ந்து வரும் பொருளாதாரத்தில் உழைப்பதற்குத் தயார் நிலையிலுள்ள உழைப்பாளிகளை போதிய பயிற்சியின்மை மற்றும் கல்வித் தகுதியின்மை என்ற நிலைகளில் வைத்திருக்கக் கூடாது. அவ்வாறு வைத்திருந்தால் அது பொருளாதார வளர்ச்சிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும். இது நமது நாட்டைப் பொறுத்தவரை கண்கூடு. மனித வளர்ச்சிக் குறியீட்டில் உலகின் 174 நாடுகளின் தர வரிசையில் 124-வது இடத்தைப் பிடித்துள்ள (2004-ஆம் ஆண்டு கணிப்பு) நாம், மேலும் மோசமான இடத்திற்குத் தள்ளப்படும் அவலம் உள்ளது. எனவே 14-23 வயதிற்குட்பட்ட பெரும்பாலானோர்க்கு உரிய தொழிற்பயிற்சி அல்லது உயர்கல்வி தரப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம்.

இதர பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் ஒதுக்கீட்டிற்காக, மத்திய அரசின் கீழ் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம்., போன்ற சுமார் 20 நிறுவனங்களில் 50 சதவீதம் இடங்களை அதிகரிப்பதற்கு மட்டுமே அடுத்த மூன்றாண்டுகளில் ரூ. 20 ஆயிரம் கோடிக்கு மேல் செலவழிக்க வேண்டியுள்ளது. அனைவருக்கும் கல்வி' திட்டத்தை மேலெடுத்துச் செல்லத் தேவைப்படும் நிதி ஒதுக்கீட்டின் அளவும் அவசியமும் இதிலிருந்து ஓரளவிற்குப் புலனாகும்!

உயர் கல்விக்கான வயது வரம்பான 17 - 23-ல் இன்று உயர் கல்வி பெறுவோரின் அளவு சுமார் 8 சதவீதம் மட்டுமே! தேசிய வளர்ச்சியை நிலைநிறுத்திக் கொள்ளத் துடிக்கும் எந்தவொரு நாட்டிலும் இவ்விகிதம் 13 சதவீதத்திற்கு மேல் இருக்க வேண்டியது அவசியம். நமது நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டால் இவ்விகிதம் குறைந்தபட்சம் 20 சதவீதம் என்றாவது அமைய வேண்டும் என்கின்றனர் பொருளாதார மேதைகள்.


சீனா மற்றும் கிழக்காசிய நாடுகளின் கடும் போட்டியால் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க, நம் நாட்டில் உயர்கல்வியைத் திட்டமிட்டு உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது! 112 கோடிக்கு மேல் மக்கள்தொகையைக் கொண்ட நாட்டில் 105 லட்சம் மாணவர்களே உயர்கல்வியை எட்டுவதும், 1.4 லட்சம் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்வதும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய மக்கள்தொகைப் பெருக்க நெருக்கடியில் உயர்கல்விக்கான நிதி ஒதுக்கீடு விகிதம் நாளுக்கு நாள் குறைந்து வருவது கவலை அளிக்கிறது.
உயர்கல்வி முற்றிலுமாகத் தனியாருக்கே தாரை வார்க்கப்படுகிற நிலை; 8 சதவீதமாக உள்ள உயர்கல்விக்கான மாணவர் விகிதம் கட்டாயமாக உயர்ந்தே ஆக வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வையில் கடைபரப்பும் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் அணிவகுப்பு; உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் முறைகேடுகள்; பல்கலைக்கழக ஆட்சிமுறை நிர்வாக கோணல்கள்; அரசுகளின் பாரா முகம் போன்ற பல்வேறு காரணங்களால் நிலைகுலைந்திருக்கும் நமது உயர்கல்வி, வரும் ஆண்டுகளில் எப்படி இருக்கப் போகிறது என்பதற்கு ஆருடம் தேவையில்லை!

1.நால்வரில் ஒருவர் வறுமைக்கோட்டுக்கும் கீழே உழன்று கொண்டு, உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இல்லாத நிலையில், அனைவருக்கும் கல்வியை அளிக்கப் போகிறோமா?

2.உரிய வயதில் உள்ள ஐவரில் ஒருவருக்காவது உயர்கல்வியைச் சுவைக்கும் வாய்ப்பை அளிக்கப் போகிறோமா?

3.கல்விக்கான செலவினம் நாட்டின் வருங்காலத்திற்கான முதலீடு என்ற உணர்வுடன் 2020-ம் ஆண்டுக்குள் உலகின் பொருளாதார வல்லரசாக உயரப் போகிறோமா?

இத்தகைய எண்ணற்ற வினாக்களுக்கு விரைவில் விடை காணத்தானே வேண்டும் நாம்!

நன்றி-தினமணி