கல்விக்குக் குறைந்த நிதி!
மத்திய அமைச்சர் கபில் சிபல் தலைமையிலான குழு பரிந்துரைத்த "கல்வி உரிமை வரைவு மசோதாவை'ச் சட்டமாக்கி அமல்படுத்தினால் கூடுதல் நிதி நெருக்கடி ஏற்படும் என்ற கருத்தின் அடிப்படையில் சட்டமியற்றி நிறைவேற்றும் பொறுப்பிலிருந்து மத்திய அரசு தன்னை விடுவித்துக் கொண்டுள்ளது. இதன் மூலம் 86-வது அரசியல் சாசனத் திருத்தம் உறுதிப்படுத்தியுள்ள அடிப்படைக் கல்வி உரிமையை மறுத்து இந்த நாட்டின் கோடானு கோடி மக்களுக்கு மத்திய அரசு அநீதி இழைத்துள்ளது.
கல்விக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு 10 சதவீதமாகவும், மாநில அரசின் ஒதுக்கீடு 30 சதவீதமாகவும் உயர வேண்டுமெனத் தொடர்ந்து கல்வியாளர்கள் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் இக் கோரிக்கைகளின் நியாயங்கள் இன்னும் உணர்ந்து கொள்ளப்படாமலே உள்ளன.
ராணுவச் செலவுக்குத் தன்னுடைய பட்ஜெட்டில் 15 சதவீதத்திற்கும் மேல் பணம் ஒதுக்கித் தாராளமாகச் செலவு செய்யும் நமது அரசாங்கம், எதிர்காலத் தலைமுறையைப் பட்டை தீட்டும் கல்விக்கூடங்களுக்கு மட்டும் கஞ்சத்தனமாக 3.4 சதவீதத்தைத்தான் ஒதுக்குகிறது. இந்தியாவில் தனிப்பட்ட வி.வி.ஐ.பி.க்களையும், வி.ஐ.பி.க்களையும் பாதுகாக்க அரசாங்கம் ஒதுக்கி வரும் நிதியைக் காட்டிலும் ஒட்டுமொத்த கல்விக்காக ஒதுக்கும் நிதி குறைவு.
இதனால் பள்ளி செல்லும் பருவத்தில் உள்ள 22 கோடி குழந்தைகளில் 12 கோடி குழந்தைகளால் மட்டுமே கல்விக்கூடம் செல்ல முடிகிறது. இதிலும் பள்ளிப்படிப்பை முழுவதுமாகப் படித்து முடிப்பவர்களின் எண்ணிக்கை 3 கோடிக்கும் குறைவாகும்.
1951-ல் இருந்த தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2,10,000. அறியாமை இருள் விலக்கி ஜனத்தொகை வளர்ச்சிக்கேற்ப, பொருளாதார, கலாசார வளர்ச்சிக்கேற்ப கல்விக்கூடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்குமானால் குறைந்தபட்சம் 20 லட்சம் தொடக்கப்பள்ளிகளாவது இந்தியாவில் தற்பொழுது இருந்திருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக இதன் எண்ணிக்கை 2005-ல் சுமார் 5,81,000 மட்டுமே.
விளைவு, தற்பொழுது நம் நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை (கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை அல்ல) 65 சதவீதமாகத்தான் உள்ளது. அதாவது உலகில் உள்ள எழுதப்படிக்கத் தெரியாதவர்களில் பாதிக்கு மேல் இந்தியாவில் உள்ளனர்.
"கல்வி பற்றிப் பேசும்பொழுது ஒரு சமுதாயத்தின் முழு கட்டமைப்பைப் பற்றியும் அதன் முழுத்திட்ட அமைப்புகளைப் பற்றியும் பேசுகிறோம்' என்ற லத்தீன் அமெரிக்க சிந்தனையாளரான பவுலோ ஃபிரைடேவின் வார்த்தைகளில் உள்ள உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொண்டால்தான் இளந்தலைமுறையினருக்கு முறையான கல்வி பெறச் செலவழிக்கும் பணம் என்பது நாட்டின் வருங்கால முன்னேற்றத்திற்கான முதலீடு என்ற பார்வை நமக்கு வரும்.
இவையெல்லாம் உணரப்பட்டு கல்வியறிவு இல்லாத மக்களை நாட்டின் சுமைகளாகக் கருதி அதை நிவர்த்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யாதவரை 9 சதவீத அல்லது 10 சதவீத வளர்ச்சி என்பதெல்லாம் வெறும் கனவாகவே இருக்கும்.
நன்றி- தினமணி.